மதுரை : மதுரை போலீசாருக்கு பணிச்சுமை, மனஅழுத்தத்தை குறைக்க திருவள்ளூர்
மாவட்டம் போல வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுமா என போலீசார் எதிர்பார்க்கின்றனர். ஆண்டு தோறும் போலீஸ் கோரிக்கை மானியத்தின்போது இதுகுறித்த அதிகாரப்பூர்வ
அறிவிப்பு வெளியாகும் என போலீசார் இளவு காத்த கிளியாக காத்திருப்பது தான் மிச்சம்.
இந்நிலையில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ்தாஸ் போலீசாருக்கு வாரம் ஒருநாள் விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலித்ததாகவும், அந்தந்த மாவட்டஎஸ்.பி.,க்கள், கமிஷனர்கள் முடிவெடுக்கலாம் என தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும்
வகையில் திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கு சுழற்சி முறையில் விடுமுறை அளிக்க
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதுபோல் மதுரை நகர், மாவட்ட போலீசாருக்கும் விடுமுறை அளிக்கப்படுமா என எதிர்பார்ப்பு உள்ளது. போலீசார் கூறியதாவது: டி.ஜி.பி.,யிடம் இருந்து வெள்ளி, சனியன்று கவாத்து பயிற்சி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதை உடனே அதிகாரிகள் அமல்படுத்தி விட்டார்கள். அதேசமயம் விடுமுறை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மன
அழுத்தமும், பணிச்சுமையும் ஏற்படுகிறது. கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா,எஸ்.பி., சுஜீத்
குமார் கருணை காட்ட வேண்டும், என்றனர்.