ஈரோடு: தமிழகத்தில் எஸ்.ஐ., பதவிக்கு கீழ் உள்ள அனைத்து போலீசாருக்கும், வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்க, சிறப்பு டி.ஜி.பி., ராஜேஸ்தாஸ் உத்தரவிட்டார். ஈரோடு மாவட்டத்தில் உத்தரவு அமலுக்கு வந்துள்ள நிலையில், ஆயுதப்படை போலீசார், தங்களுக்கும் விடுப்பு வழங்க, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: ஸ்டேஷன்களில் பணிபுரியும் போலீசாருக்கு மட்டும், விடுமுறை அறிவித்து, ஆயுதப்படை போலீசாருக்கு, உத்தரவு பொருந்தாது என்பது, ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் இடங்களில் பாதுகாப்பு, கருவூலம், கலெக்டர் அலுவலகம் உள்பட அரசு அலுவலக பாதுகாப்பு, சிறை, நீதிமன்றங்களுக்கு கைதிகளை அழைத்து செல்வது, வி.ஐ.பி., பாதுகாப்பு, வாகன சோதனை உள்ளிட்ட பணிகளில் எங்களை ஈடுபடுத்துகின்றனர். எங்களுக்கும் பணிச்சுமை உள்ளது. எங்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.