மொடக்குறிச்சி: மகள் பிறந்தநாள் கொண்டாடுவதில் ஏற்பட்ட தகராறில், தாய் தற்கொலை செய்து கொண்டது, உறவினர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
மொடக்குறிச்சி, பழமங்கலம் பஞ்., வடுகனூரை சேர்ந்த சண்முகம் மகள் தமிழ்ச்செல்வி, 33; கொடுமுடி, கிளாம்பாடி, மலையம்பாளையம் மெயின் வீதியை சேர்ந்தவர் பூபாலன். இருவருக்கும் பத்தாண்டுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதியருக்கு ஒன்பது, இரண்டு வயதுகளில் இரு மகள்கள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தமிழ்செல்வி ஒன்றரை ஆண்டாக, குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். மூத்த மகளுக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள். இதை கொண்டாட, மாமனார் வீட்டுக்கு பூபாலன் வந்தார். விழாவை ஒன்று சேர்ந்து கொண்டாட முடிவு செய்த நிலையில், தமிழ்செல்வி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சண்முகம், சின்ன சம்மந்தி வீட்டில் பிறந்தநாள் கொண்டாட முடிவு செய்து, மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினருடன் சென்று விட்டார். தமிழ்செல்வி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், குழந்தை தொட்டில் கட்டும் கம்பியில், கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிறந்தநாள் விழாவை முடித்து, வீடு திரும்பிய குடும்பத்தினர், தமிழ்செல்வி சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சண்முகம் புகாரின்படி, சிவகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.