அம்மாபேட்டை: அம்மாபேட்டை அருகே, வேலையில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி, கட்டட தொழிலாளி பலியானார். ஈரோடு மாவட்டம், பவானி, அம்மாபேட்டையை அடுத்த கொளந்தபாளையத்தை சேர்ந்தவர் அண்ணாமலை, 41; கட்டட தொழிலாளி. நாகம்பாளையம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வீட்டில், நேற்று வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில், அண்ணாமலை சம்பவ இடத்தில் பலியானார். அம்மாபேட்டை போலீசார் உடலை கைப்பற்றி, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மின்சாரம் தாக்கி பலியான அண்ணாமலைக்கு, திருமணமாகி மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.