ஈரோடு: ஈரோடு மாவட்டம், அந்தியூர் வனச்சரகம், பர்கூர் வனப்பகுதியில் சூழல் சுற்றுலா (எகோ-டூரிசம்) துவங்க, ஈரோடு மாவட்ட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில், ஏராளமான புலிகள், சிறுத்தைகள், யானை உடப்ட வன விலங்குகள் உள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளதால், சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் வண்ணபூரணி என்ற பெயரில், சூழல் சுற்றுலா செயல்பட்டது. கொரேனா பரவல் தடுப்பு காரணங்களால், தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்தியூர் வனக்கோட்டத்தில், பர்கூரை மையமாக வைத்து, சூழல் சுற்றுலா துவங்க வனத்துறை திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, ஈரோடு மாவட்ட வன அதிகாரி விஸ்மிஜு விஸ்வநாதன் கூறியதாவது: அந்தியூர் வனத்துறையின் ஓய்வு விடுதியில் தங்கியிருந்து, அங்கிருந்து புறப்பட்டு வரட்டுப்பள்ளம் அணை, பர்கூர் இன கால்நடை ஆராய்ச்சி நிலையம், மடம், மணியாச்சிபள்ளம், கொங்காடை உள்ளிட்ட சில பகுதிகளை பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது. தாமரைக்கரையில் இதற்காக, வனத்துறை மூலம் இரண்டு குடில்கள் கட்டி வைத்துள்ளோம். அங்கு தலா, நான்கு முதல், ஐந்து பேருக்கு மேல் தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. வனவிலங்குகள் வந்து செல்லும் இடம், தண்ணீர் குடிக்கும் இடம், மக்கள் பார்வையிட விரும்பும் இடங்களை இணைத்து, சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும். தவிர, வாகன வசதி, உணவு போன்றவை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்கான வாகனம், ஸ்பான்சர் மூலம் ஏற்பாடு செய்து வருகிறோம். கட்டணம் விபரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.