கரூர்: கரூரில் இன்று நடைபெற உள்ள வெற்றிவேல் யாத்திரையில் பங்கேற்க, மாநில பா.ஜ., தலைவர் முருகன் வருகிறார். தமிழக, பா.ஜ., சார்பில் வெற்றி வேல் யாத்திரை கடந்த, 6ல் திருத்தணியில் துவங்க இருந்தது. ஆனால், தமிழக அரசு அனுமதி அளிக்காத நிலையில், வேல் யாத்திரை திட்டமிட்டபடி வரும் டிச., 7 வரை தொடர்ந்து நடக்கும் என, மாநில பா.ஜ., நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். அதன்படி, கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே இன்று காலை, 10:00 மணிக்கு மாவட்ட தலைவர் சிவசாமி தலைமையில், வெற்றிவேல் யாத்திரை நடக்கிறது. மாநில தலைவர் முருகன், துணைத்தலைவர் அண்ணாமலை, இணைப்பொருளாளர் சிவசுப்பிரமணியம், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட, நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். வெற்றி வேல் யாத்திரைக்கு, அனுமதி அளிக்கவில்லை. இதனால், மாநில தலைவர் முருகன் உள்ளிட்ட, நிர்வாகிகள் கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது. இதனால், கரூர் நகரில், 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.