கரூர்: மேட்டூர் அணையில் இருந்து, தண்ணீர் திறப்பின் அளவு குறைக்கப்பட்டதால், மாயனூர் கதவணைக்கு வரும், தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. கடந்த ஜூன், 12 முதல் குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது, சம்பா சாகுபடி தொடங்கியுள்ள நிலையில், மழை பெய்து வருவதால், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த, 20 முதல் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு, 1,000 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமராவதி அணையில் இருந்து கடந்த, 5 முதல் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், நொய்யல் ஆறு மற்றும் பவானிசாகர் அணையில் இருந்து வரும் தண்ணீரும், குறைந்துள்ளதால், கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. அதிகப்பட்சமாக வினாடிக்கு, 22 ஆயிரம் கன அடி தண்ணீர் மாயனூர் கதவணைக்கு வந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு நிலவரப்படி, மாயனூர் கதவணைக்கு, 3,861 கன அடி தண்ணீர் வந்தது. காவிரியாற்றில், 2,841 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 920 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
* திருப்பூர் அமராவதி அணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 538 கன அடி தண்ணீர் வந்தது. ஆறு மற்றும் புதிய வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 75.17 அடியாக இருந்தது.
* கார்வாழி ஆத்துப்பாளையம் தடுப்பணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 24 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 19.68 அடியாக இருந்தது. மேலும், மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி கடந்த, 24 மணி நேரத்தில் மழை பதிவாகவில்லை. ஆனால், கிராமப்பகுதிகளில் பனி மூட்டம் காணப்பட்டது.