கரூர்: 'கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள், தனியார் பள்ளிகளில் படிக்க விண்ணப்பிக்கலாம்' என, தொழிலாளர் (சமூக பாதுகாப்பு திட்டம்) உதவி ஆணையர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள, தொழிலாளர்களின் குழந்தைகள், 5 ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றால், தனியார் பள்ளிகளில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, வட்டாரத்துக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, 6 ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு வரை படிக்க உதவி பெறலாம். தற்போது, 5ம் வகுப்பு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., வகுப்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து, அதிக மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்கள், 6ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பில், தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு கரூர் வெண்ணைமலையில் உள்ள, தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.