மதுராந்தகம் : மதுராந்தகம் ஏரி, 17 அடியை எட்டியுள்ளதால், விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என, விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரிகளில், மதுராந்தகம் ஏரி, முக்கியமானதாக உள்ளது. இந்த ஏரி, 23.3 அடி ஆழம், 2,411 ஏக்கர் பரப்பளவு உடையது. மதுராந்தகம் ஏரி முழுமையாக நிரம்பினால், அத்தண்ணீரை வைத்து, சுற்றுவட்டாரத்தில் உள்ள, 2,853 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும்.இந்தாண்டு பருவ மழைக்கு, கடந்த வாரம், ஏரி, 16 அடி எட்டியது. அதையடுத்து மழை குறைந்ததால், ஏரிக்கு நீர்வரத்தும் குறைந்து வந்தது.
இந்நிலையில், இரு தினங்களாக பெய்த மழையால், நேற்று, 17 அடியை எட்டியது. நிவர் புயல் காரணமாக, தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், இந்த ஆண்டு ஏரி முழு கொள்ளளவை எட்டும் என, விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.