திருத்தணி : ஊராட்சியில், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் போடப்படும் தார்ச்சாலை பணிகள், பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் ஊராட்சியில் உள்ள காசிநாதபுரம் கிராமத்தில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்நிலையில், திருத்தணி - நாகலாபுரம் மாநில நெடுஞ்சாலையில் இருந்து, காசிநாதபுரம் செல்லும் தார்ச்சாலை பழுதடைந்ததால், கடந்த மாதம், தார்ச் சாலையை சீரமைக்க, 40 லட்சம் ரூபாய் மதிப்பில், நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்கப்பட்டன.ஆனால், சாலைப் பணிகள் மெத்தனமாக நடந்து வருகின்றன. அதாவது, சாலை முழுதும், ஜல்லிகற்கள் பெயர்தெடுத்து அதன் தார் போடுவதற்காக, சிறிய ஜல்லி சாலை அமைக்கப்பட்டது.
இப்பணிகள் முடிந்து 10 நாட்கள் மேல் ஆகியும், தார் போடாததால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே, பாதியில் நிறுத்தப்பட்ட தார்ச்சாலை பணிகள் விரைந்து முடிக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.