பள்ளிப்பட்டு : புயல் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், ஆற்றில் தரைப்பாலத்திற்கு மேல் வெள்ளம் பாய்ந்து வருகிறது.
வெள்ளத்தில் நடந்து, கிராமத்திற்குள் பொதுமக்கள் சென்று வருகின்றனர். பள்ளிப்பட்டு அருகே உருவாகும் கொற்றலை ஆற்றுக்கு, ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் அணைக்கட்டில் இருந்து நீர்வரத்து உள்ளது.நேற்று முன்தினம் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், கொற்றலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.பெருமாநல்லுார், நெடியம், சாமந்தவாடா வழியாக பாயும் கொற்றலையின் குறுக்கே, ஆங்காங்கே தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. புண்ணியம் அருகே, மேம்பாலம் அமைந்துள்ளது.
சாமந்தவாடா தரைப்பாலத்தின் மீது, வெள்ளம் பெருக்கெடுத்து பாயும் நிலையில், கிராமத்தினர். வெள்ள அபாயத்தை பொருட்படுத்தாமல், ஆற்றை கடந்து சென்று வருகின்றனர். 'நிவர்' புயல் மையம் கொண்டுள்ள நிலையில், கொற்றலையில் வெள்ளப்பெருக்கு மேலும் தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கிராமத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நிரந்தர தீர்வாக, ஆற்றின் குறுக்கே, மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.