ஊத்துக்கோட்டை : முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, பிச்சாட்டூர் நீர்த்தேக்கம் திறக்கப்பட்டு, வினாடிக்கு, 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர் கிராமத்தில், ஆரணி ஆற்றில், குறுக்கே நீர்த்தேக்கம் உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு, 1.8 டி.எம்.சி., நீர்மட்டம், 32 அடி. சமீபத்தில் பெய்த மழையால் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்து, 29.65 அடியாக உயர்ந்தது. மழை பெய்தால், உபரி நீர் திறக்கப்படும் என, ஆந்திர மாநில பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.வங்கக் கடலில் உருவான, 'நிவர்' புயலால் தமிழகம் உள்ளிட்ட, 12 மாவட்டங்களில், கன மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
பிச்சாட்டூர் நீர்த்தேக்கம், நேற்று, மாலை, 5:00 மணிக்கு, அங்குள்ள நான்கு மதகுகளில், இரண்டு மட்டும் திறந்து, வினாடிக்கு, 400 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டது.நள்ளிரவில் மழை பெய்தால் கூடுதல் நீர் வெளியேற்றப்படும். திறக்கப்பட்ட நீர் 10:00 மணிக்கு தமிழக எல்லையான ஊத்துக் கோட்டையை அடையும்.