சென்னை : 'மாருதி சுசூகி' நிறுவனத்தின், புதிய சந்தா திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் புதிய காரை, சொந்தமாக வாங்காமலே, பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக, 'மாருதி சுசூகி இந்தியா' உள்ளது. இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக, புதிய வாகன சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.'மாருதி சுசூகி சந்தா' என அழைக்கப்படும், இந்த சந்தா திட்டம், டில்லி, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் புனே போன்ற முக்கிய நகரங்களில், செப்டம்பரில் துவங்கப்பட்டது. இதற்கு, வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.தற்போது, மும்பை, சென்னை, ஆமதாபாத் மற்றும் காந்திநகர் ஆகிய நகரங்களில், அறிமுகம் செய்யப்படுகிறது.
ஜப்பானை தளமாகக் கொண்ட 'ஓரிக்ஸ்' கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான, 'ஓரிக்ஸ் ஆட்டோ இன்ப்ராஸ்ட்ரக்சர் சர்வீசஸ் இந்தியா' என்ற நிறுவனத்துடன் இணைந்து, மாருதி இத்திட்டத்தை, அறிமுகம் செய்துள்ளது.இத்திட்டத்தின் வாயிலாக வாடிக்கையாளர்கள், புதிய மாருதி கார்களை சொந்தமாக வாங்காமல், பயன்படுத்தி கொள்ள முடியும்.இதற்காக, முழுமையான பராமரிப்பு, காப்பீடு மற்றும், 24 × 7 மணி நேர, சாலையோர உதவிகள் என, அனைத்தும் உள்ளடக்கிய, மாதாந்திர கட்டணத்தை செலுத்த வேண்டும்.வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பப்படி, 12 -- 48 மாதங்கள் வரையிலான, கால அளவை தேர்ந்தெடுக்கலாம்.
சந்தா காலம் முடித்தஉடன், வாடிக்கையாளர் வாகனத்தை மேம்படுத்தவோ, நீட்டிக்கவோ அல்லது சந்தை விலையில், காரை வாங்கவோ தேர்வு செய்யலாம்.வாடிக்கையாளர்கள் விருப்பத்தின்படி, சந்தா திட்டத்தில் பெறும் காரை, வாடிக்கையாளரின் பெயரில் பதிவு செய்து, வெள்ளை நம்பர் பிளேட் உடனும் அல்லது, ஓரிக்ஸ் பெயரில் பதிவு செய்யப்பட்டு, கறுப்பு நம்பர் பிளேட் உடனும் வழங்குகிறது.சென்னையில், ஸ்விப்ட் எல்.எக்.எஸ்., வாகனத்திற்கு, 48 மாத காலத்திற்கு, மாதாந்திர சந்தா கட்டணமாக, 15,196 ரூபாய் வழங்க வேண்டும்.
இது குறித்து, மாருதி சுசூகி இந்தியா, சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவு நிர்வாக இயக்குனர் ஷஷாங்க் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:மாருதி சுசூகி சந்தா திட்டம் அறிவிக்கப்பட்ட சில மாதங்களிலேயே, வாடிக்கையாளர்களிடம் இருந்து, 6,600க்கும் மேற்பட்ட விசாரணைகள் வந்துள்ளன.மாருதி சுசூகி சந்தா திட்டத்தை, 2 - - 3 ஆண்டுகளில், 40 -- 60 நகரங்களில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.