காசிமேடு : காசிமேடில், கொடுத்த நகையை, ஆசிரியை திருப்பி கேட்டதால், நாயை ஏவி கடிக்க வைத்த, பள்ளி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, தண்டையார்பேட்டை, விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் சுதாகர்; மீனவர். இவரது மனைவி ஸ்ரீமதி, 31. இவர், 2016ல், காசிமேடு, ஆதி திராவிடர் தெருவில் உள்ள, மாதா நர்சரி பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்தார்.அப்போது, பள்ளி கட்டட விரிவாக்க பணிகளுக்காக, பள்ளி நிர்வாகி கார்த்திக் என்பவர், ஸ்ரீமதியிடம், 27 சவரன் நகை, கடனாக வாங்கி உள்ளார். இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், வேலையை விட்டு ஸ்ரீமதி நின்று விட்டார். கொடுத்த நகையை திருப்பி தரக்கோரி, ஸ்ரீமதி கேட்கும் போதெல்லாம், கொரோனா உள்ளிட்ட சாக்குபோக்கு சொல்லி, நகையை கொடுக்க மறுத்து வந்துள்ளார், கார்த்திக். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தன் அண்ணன் முத்துகுமார் என்பவருடன் சென்ற ஸ்ரீமதி, 'கடனாக பெற்ற நகையை திருப்பி தந்து விடுங்கள்' எனக் கேட்டுள்ளார்.
அப்போது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.வாக்குவாதம் முற்றவே, கார்த்திக், வளர்ப்பு நாயை ஏவி விட்டு கடிக்க வைத்துள்ளார். இதில், மிரண்டு போன ஆசிரியை, ஓட முயற்சித்தபோது, கால் இடறி கீழே விழுந்தார். அப்போது, நாய் அவரது முகம், கை , கால் போன்ற இடங்களில் கடித்துள்ளது. கீழே விழுந்ததிலும், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின், அவர் சிகிச்சைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இது குறித்து விசாரித்த, காசிமேடு போலீசார், கார்த்திக் என்ற பிரேம்நாத், 29, என்பவரை, நேற்று காலை கைது செய்தனர். கொடுத்த நகையை திருப்பி கேட்ட ஆத்திரத்தில், நாயை ஏவி, கடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.