திண்டிவனம் : திண்டிவனத்தில் வழிப் பறி வழக்கில், கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் ஜானிபாஷா. இவர் கடந்த 2004ஆம் ஆண்டு 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை செஞ்சி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு எடுத்துச் சென்றார், அப்போது திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாலுகா, புதுப்பாளையம் முத்தூர் அடுத்த வீரமாத்தி தோட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் செந்தில் என்கிற சின்னசாமி,47; திண்டிவனம் மேம்பாலம் அருகே ஜானிபாஷாவை வழிமறித்து பணத்தைப் பறித்துச் சென்றார்.
புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் சின்னசாமியை கைது செய்து, திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.பின், ஜாமினில் வெளிவந்த சின்னசாமி தொடர்ந்து கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்துவந்தார். இதனால் திண்டிவனம் கோர்ட்டில் சின்னசாமியை கைது செய்து ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து கடந்த 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்திலை, டி.எஸ்.பி., கணேசன் தலைமையிலான தனிப்படை போலீசார், திருப்பூர் மாவட்டத்திற்கு சென்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.