திண்டுக்கல்:தமிழகத்தில் முதன் முறையாக திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் எலுமிச்சை புற்களில் இருந்து தைலம் தயாரிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிறுமலையில் தோட்டக்கலைத்துறை பண்ணை, வனத்துறைக்கு சொந்தமான வெள்ளிமலை பகுதிகளிலும் நாட்டு வகை எலுமிச்சை புல், யூகலிப்டஸ் மரங்கள் உள்ளன. இவற்றை கொண்டு தைலம் தயாரிக்க, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் இயக்குனர் சுப்பையன் ஆலோசனை வழங்கினார். அதன்படி, நீராவியை பயன்படுத்தி எலுமிச்சை புற்களில் இருந்து தைலம் தயாரிக்கும் மையம் அமைக்கப்பட்டது. இங்கு நவ.21 முதல் தைலம் தயாரிக்கப் படுகிறது.தமிழகத்தில் இவ்வகை புற்களில் தைலம் தயாரிப்பது இதுவே முதல் முறை.
இத்தயாரிப்புக்காக பிரத்யேக நீராவி இயந்திரத்தில் இருக்கும் கன்டெய்னரில் 250 கிலோ எலுமிச்சை புற்கள் கொட்டப்படுகிறது. மற்றொரு குடுவையில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, அதில் இருந்து வெளியேறும் ஆவியில் எலுமிச்சை புற்கள் 4 மணி நேரம் வேக வைக்கப்படுகிறது.அதிலிருந்து வெளியேறும் நீரில் தண்ணீரும், தைலமும் பிரித்தெடுக்கப் படுகிறது. தைலத்தை சுத்திகரித்து 100 எம்.எல்.,பாட்டிலில் விற்பனைக்கு தயார்படுத்துகின்றனர்.
எலுமிச்சை புற்களில் மட்டுமின்றி யூகலிப்டஸ், புதினா, மரிக்கொழுந்து, ஜெரேனியம், லாவன்டர் தாவரங்களின் இலைகளில் இருந்தும் எண்ணெய் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.சரும பிரச்னைக்கு உதவும்தோட்டக்கலை துணை இயக்குனர் பெருமாள்சாமி கூறியது: 250 கிலோ எலுமிச்சை புற்களில் இருந்து 1 லிட்டர் தைலம் தயாரிக்கலாம்.
இப்புற்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது, இதர தாவரங்களில் இருந்து வாசனை திரவியம், எண்ணெய் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த தைலம் சரும நோய்க்கு மருந்தாகவும், இயற்கை கொசு விரட்டியாகவும் பயன்படும். விரைவில் கடைகளில் விற்பனைக்கு வரும், என்றார்.