ராமேஸ்வரம்:நிவர் புயலால் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் 2ம் நாளாக கடல் கொந்தளித்து, ராட்சத அலைகள் எழுந்ததன.வங்க கடலில் உருவான நிவர் புயல், இன்று(நவ.,25) மாலை சென்னை அருகே கரை கடக்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது.
நவ.,23ல் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டு, நவ.,22 முதல் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இப்புயல் எச்சரிக்கையால் 2ம் நாளான நேற்றும் பாம்பன், ராமேஸ்வரத்தில் கடல் கொந்தளித்து 4 முதல் 6 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் கரையில் மோதி ஆக்ரோஷமாக எழுந்தது.
நேற்று பாம்பன் வடகடற்கரையில் மீனவர் வீடு சுவர் இடிந்து விழுந்தது. பாம்பன் சின்னபாலம் கடலோரத்தில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திய மீனவர்கள் வீடுகளில் முடங்கியதால், பாம்பன் கடலோரத்தில் மீனவர்கள் இன்றி வெறிச்சோடி கிடந்தது.இப்புயலால் ராமேஸ்வரம் பகுதியில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், மீட்பு பணியில் இந்திய கடலோர காவல் படை வீரர்கள், பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளதாக வருவாய்துறையினர் தெரிவித்தனர்.