கோவை:ஸ்டீல், நிலக்கரி, காப்பர், அலுமினியம் என மூலப்பொருள் விலை உயர்வால், தொழில் துறையினர் கவலை அடைந்துள்ளனர். அதிகபட்ச விலையை, அரசு உடனே நிர்ணயிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
அத்துடன், கோவையில் தற்காலிகமாக மூடப்பட்ட 'செயில்' நிறுவனத்தையும் உடனடியாக திறக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.கொரோனா தொற்றிலிருந்து, மீண்டு வந்த தொழில் துறைக்கு, அடுத்த அடியாக மூலப்பொருள் விலை உயர்வு, கடும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. ஓரிரு மாதங்களில் ஏற்பட்ட உயர்வால், தொழில்துறையினர் அச்சம் அடைந்துள்ளனர்.
இன்ஜினியரிங் தொழிலின் முக்கிய அடிப்படையாக இருக்கும், இரும்பு விலை ஆகஸ்ட் மாதத்திலிருந்து, மூன்றே மாதங்களில் டன் ஒன்றுக்கு, 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது.கடந்த ஆகஸ்டில் டன் ரூ.37 ஆயிரமாக இருந்த ஸ்டீல் விலை, தற்போது ரூ.47 ஆயிரமாக எகிறியுள்ளது. இதுபோன்றே தாமிரம், துத்தநாகம், பித்தளை உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலையும், 30 முதல் 35 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
மூலப்பொருட்கள் விலை உயர்வால், தொழில் நிறுவனங்கள் அவற்றை வாங்க தேவையான, நிதியை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. அரசு அறிவித்த கூடுதல் நிதியுதவியும் பயன்படுத்தப்பட்டு விட்டது.சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு செயில், விசாக், என்எஸ்ஐசி, சிட்கோ போன்ற அமைப்புகள், மானிய விலையில் மீண்டும் மூலப்பொருட்களை வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்; எகிறும் மூலப்பொருட்கள் விலையை கட்டுப்படுத்த, அதிகபட்ச விற்பனை விலையை மத்திய அரசு உடனடியாக நிர்ணயிக்க வேண்டும் என, தொழில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.'கொடிசியா' தலைவர் ராமமூர்த்தி, இது குறித்து கூறியதாவது:ரயில்வே மேம்பாலம் கட்டுமானம் நடப்பதை, காரணமாக வைத்து, கோவை 'செயில்' நிறுவனம் மூடப்பட்டது. தற்போது பாலம் கட்டுமான பணி முடிந்து விட்டது. இந்த கிடங்கை திறந்தால், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனத்தினரின் ஸ்டீல் பொருட்களுக்கான தேவை நிறைவேறும்.
பம்ப் உள்ளிட்ட பல்வேறு இன்ஜினியரிங் தொழில் நிறுவனங்கள், ஏற்கனவே பெற்ற ஆர்டர்களின் விலையை, உயர்த்த இயலாத நிலையில் உள்ளனர்.கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வரும் இந்த சூழலில், வாடிக்கையாளர்களுக்கும் பொருள் விலையை உயர்த்த இயலாது. இப்படி, தொழில்கள் கஷ்டத்திலிருந்து தப்பினாலும், தற்போது நஷ்டத்தில் மாட்டிக் கொண்டுள்ளனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
இரும்பு விலை ஆகஸ்ட் மாதத்திலிருந்து மூன்றே மாதங்களில் டன் ஒன்றுக்கு, 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்டில் டன் ரூ.37 ஆயிரமாக இருந்த ஸ்டீல் விலை, தற்போது ரூ.47 ஆயிரமாக எகிறியுள்ளது. இதுபோன்றே தாமிரம், துத்தநாகம், பித்தளை உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலையும், 30 முதல் 35 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.