உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே தம்பதியை கட்டிப்போட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த கூ.நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, 61; விவசாயி. இவரது மனைவி ராஜகுமாரி, 59; இருவரும் கடந்த மே மாதம் 25ம் தேதி இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர்.அப்போது முகமூடி அணிந்த மர்ம கும்பல் ராமசாமியின் வீட்டிற்குள் புகுந்து இருவரையும் வேட்டியால் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு, பீரோவை உடைத்து பதிநான்கரை சவரன் நகைகள் மற்றும் 2.80 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து திருநாவலுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், கொள்ளை வழக்கில் தொடர்புடைய புதுச்சேரி சோரப்பட்டைச் சேர்ந்த பெரியசாமி மகன் கார்மேகம், 18; சுந்தர்ராஜ் மகன் சுந்தரவேல், 25; வானுார் நெமிலியைச் சேர்ந்த திருநாவுக்கரசு மகன் தினகரன், 26; கூ.நத்தம் கிராமத்தைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி, 65; ஆகிய நான்கு பேரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.