திண்டிவனம் : அரசின் புயல் எச்சரிக்கை காரணமாக, அரசு பஸ் போக்குவரத்து குறைந்துவிட்டதால், வெளியூர் செல்லும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
புதியதாக உருவான நிவர் புயல் எதிரொலியால், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டங்களுக்கிடையே மாவட்டங்களுக்குள்ளும் நேற்று (24 ம்தேதி) பிற்பகல் 1:00 மணிமுதல் பஸ் போக்குவரத்து மறு உத்தரவு வரை நிறுத்தி வைக்கப்படும் என அரசு உத்தரவிட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் வழியாக இயக்கப்படும் பெரும்பாலான அரசு பஸ்கள் குறைவான அளவில் இயக்கப்பட்டது. காலை 9.30 மணிக்கு மேல் அரசு பஸ்கள் இயக்கப்படாததால், தனியார் பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதே போல் திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி வரை செல்லும் அரசு பஸ்கள் நேற்று காலை 10:00 மணிக்கு பிறகு குறைவான அளவில் இயங்கப்பட்டது. இதனால் தனியார் பஸ்களில் வழக்கத்தை விட கூடுதலாக பயணிகள் முண்டியடித்துக்கொண்டு ஏறினர்.
விழுப்புரத்திலிருந்து திண்டிவனம் வழியாக சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் அரசு பஸ்களில் நேற்று காலை 11:00 மணிக்கு பிறகு கூட்டம் குறைந்துவிட்டதால், வெளியூர் செல்லும் பயணிகள் மேம்பாலத்தின் கீழ் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அரசு அறிவிப்பின் படி நேற்று பிற்பகல் 1:00 மணியிலிருந்துதான் நிறுத்தப்படும் என்று அறிவித்திருந்தாலும், முன்கூட்டியே நிறுத்தியதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.