திருப்பூர்:திருப்பூரில், மின்வாரிய பிரிவு அலுவலகங்களில், ஒயர்மேன் மற்றும் உதவியாளர் பணியிடங்கள், 80 சதவீத அளவில் காலியாகவுள்ளதால், மின் தொடர்பான பணிகள் பாதிக்கின்றன.மின் வாரியத்தில், களப்பிரிவு, கணக்கீட்டு பிரிவு, வருவாய் பிரிவு, தொழில்நுட்ப பிரிவு என, மொத்த பிரிவுகளிலும் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையை விட குறைவாகவே பணியாளர்கள் உள்ளனர்.அதில், பல ஆண்டுக ளாக, 'ஒயர் மேன்' மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், மின் நுகர்வோர்கள் கடும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். மின்வாரியத்தில், மற்ற பிரிவு பணியாளர்களை விட, ஒயர் மேன் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.பழுது நீக்கம், பராமரிப்பு, கண்காணிப்பு மற்றும் தெரு விளக்குகள் பராமரிப்பு ஆகிய பணிகள் முடங்கி உள்ளன. அனைத்து பிரிவு அலுவலகங்களிலும், 'போர்மென்கள்', தங்களது வசதிக்காக, தற்காலிக ஊழியர்களை நியமித்துக் கொள்கின்றனர். அவர்கள், மின்வாரிய வரையறை மற்றும் கட்டுப்பாட்டுக்குள் நேரடியாக வருவது கிடையாது.இந்நிலையில், திருப்பூரில், தற்காலிக ஊழியர் ஒருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்ததால், இழப்பீடு கேட்டு அனைவரும் பணிக்கு செல்லாமல் உள்ளனர்.ஏற்கனவே, ஒவ்வொரு பிரிவு அலுவலகங்களில், ஒயர்மேன் மற்றும் உதவியாளர் பணியிடங்கள், 80 சதவீத அளவில் காலியாகவுள்ளதால், மின் தொடர்பான பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில், 55 பிரிவு அலுவலகங்கள் உள்ளன. இங்கு, ஒயர்மேன் மற்றும் உதவியாளர் பணியிடங்கள், 16 ஆக ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு, ஒன்று முதல் மூன்று பேர் வரை மட்டுமே பணியில் உள்ளனர். போர்மென்களால் நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்கள், பணிக்கு வராததால், பல பகுதிகளில் பழுது நீக்கும் பணி தடைபட்டுள்ளது.குறிப்பாக, வீட்டு மின் இணைப்பு பழுதுகள் சீரமைத்தல், விவசாய மின் இணைப்பு சீரமைப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது. களப்பணியாளர் பற்றாக்குறையால், மின் நுகர்வோர் மட்டுமின்றி, மின் வாரியமும் பாதிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.