கடந்த 2011 டிசம்பர் 31ம் தேதி வீசிய தானே புயல் கடலுார் மாவட்டத்தில் மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. மீனவர்கள், விவசாயிகள் என அனைவரும் பெரிதும் பாதித்தனர்.
மாவட்டம் முழுவதும் 45 ஆயிரம் மின் கம்பங்கள், 5,000 டிரான்ஸ்பார்மர்கள் விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டு மாவட்டம் ஒரு வாரம் வரை இருளில் மூழ்கியது. உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. பால், மெழுகுவர்த்தி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. படகுகள், வலைகள், வீடுகள் சேதமாகி மீனவர்கள் பாதித்தனர்.
கடலுார், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி பகுதிகளில் வீடுகள் சேதமடைந்து; தென்னை, முந்திரி, மா, பலா, வாழை உள்ளிட்ட மகசூல் தரும் மரங்கள் சாய்ந்ததில் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.மீண்டும் முந்திரி, தென்னை மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டு பராமரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அவை தற்போது தான் மகசூல் தரும் நிலையில் உள்ளன.
இந்நிலையில், தானே புயல் வீசி 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது,தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் கடந்த 21ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, 23ம் தேதி காலை காற்றழுத்த தாழ்வுமண்டலமாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நேற்று (24ம் தேதி) நிவர் புயலாகவும் வலுவடைந்தது.
இன்று மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கலாம் எனவும், இதுஅதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் எனவும், 130 முதல் 145கி.மீ., வரை சூறைக்காற்று வீசக்கூடும் எனவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது கடலுார் முதுநகர் துறைமுகத்தை நெருங்கும் அல்லது அருகே கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயலால் ஏற்படும் கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படும் என்பதை குறிக்கும் வகையில், நேற்று காலை 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் சின்னம் காரணமாக கடலுார் மாவட்டத்தில் அதிகன மழைபெய்யும், மணிக்கு 120 முதல் 130 கி.மீ., வரை காற்றும் வீசக்கூடும் என,தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தானே புயலில் கடலுார் மாவட்ட மக்கள் பாதித்த நிலையில், மீண்டும் புயல் வீசினால் வாழை, முந்திரி,தென்னை உள்ளிட்ட மகசூல் தரும் மரங்கள் சாய்ந்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். அதே போல் படகுகள், வலைகள் சேதமடையும், மின்சாரம் துண்டிக்கப்படும்; குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளதால், கடலுார் மாவட்ட பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.