கடலுார் : கடலுாரில் 'தானே' கற்றுத் தந்த பாடத்தால், நிவர் புயலை எதிர்கொள்ள மக்கள் ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி பத்திரப்படுத்தினர்.
கடலுார் சுனாமி, புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் அடிக்கடி பாதிக்கப்படும் மாவட்டமாகும். கடந்த 2011ல் 'தானே' புயலின் கோர தாண்டவத்தால், கடலுார் மாவட்டம் கடுமையான பேரழிவை சந்தித்தது.மளிகை பொருட்கள், காய்கறி, பால், குடிநீர், மண்ணெண்ணெய், மெழுகுவர்த்திகள் உட்பட அத்தியாவசியபொருட்கள் கிடைக்காமல் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
ஒரு வாரம் வரை நீடித்த மின் தடையால் மாவட்டமே இருளில் மூழ்கியது.தற்போது உருவாகியுள்ள 'நிவர்' புயல் காரணமாக கடலுாரில் மக்கள் நேற்று முன்தினம் இரவே கடைகளுக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். நேற்று அதிகாலை முதல்காய்கறி, மளிகைகடைகளுக்கு படையெடுத்து தேவையான பொருட்களைவாங்கிச் சென்றனர்.
எலக்ட்ரிக் கடைகளில் சார்ஜ் மற்றும் டார்ச் லைட்களும் வேகமாக விற்பனையாயின இதனால், சில கடைகளில் காய்கறி, மெழுகுவர்த்தி போன்ற பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்றனர். விலையை பொருட்படுத்தாமல் மக்கள் முண்டியடித்து வாங்கிச் சென்றனர். காலை 10மணிக்கே பல கடைகளில் காய்கறி, மெழுகுவர்த்தி உள்ளிட்ட பொருட்கள் விற்று தீர்ந்ததால், பலர் ஏமாற்றமடைந்தனர்.
குடிநீர் கேன்கள், டிராக்டர் மற்றும் டாடா ஏஸ் வாகனங்களில் கொண்டு வரப்பட்ட தண்ணீரை மக்கள் முன்கூட்டியே வாங்கி, பத்திரப்படுத்தினர். வீடுகளில் மின் மோட்டார் மூலம் டேங்குகளில் தண்ணீரை நிரப்பினர். கூடுதல் பாத்திரங்களிலும் பிடித்து பத்திரப்படுத்தியுள்ளனர்.