உடுமலை:நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், காப்பீடு செய்ய, வேளாண்துறை அதிகாரிகள் குழுவினர், கல்லாபுரம் பகுதியில், விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.உடுமலை கல்லாபுரம் சுற்றுப்பகுதிகளில், நெல் சாகுபடி பிரதானமாக உள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும், மூன்று நாட்கள், கனமழை, பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.எனவே, அனைத்து பயிர்களையும், பயிர் காப்பீடு செய்ய, தமிழக அரசு, வேளாண்துறை வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அவ்வகையில், கல்லாபுரம் பகுதியில், நெற்பயிரை காப்பீடு செய்ய, உடுமலை வட்டார வேளாண்துறையினர், நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.உதவி இயக்குனர் தேவி, உதவி வேளாண் அலுவலர் அமல்ராஜ், வேளாண் அலுவலர் வைரமுத்து உட்பட குழுவினர், விவசாயிகளை நேரடியாக சந்தித்து, காப்பீடு செய்வதன் நன்மைகள் குறித்து, விளக்கமளித்தனர்.வேளாண்துறையினர் கூறுகையில், 'இ-சேவை மையம், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மூலம், விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். நெற்பயிருக்கு, ஏக்கருக்கு, 507 ரூபாய் செலுத்தி, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். வரும், 30ம் தேதி கடைசி நாளாகும்' என்றனர்.