பொள்ளாச்சி:பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளில் இரண்டு நாட்கள் நடந்த முகாமில், 10,945 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 8,050 விண்ணப்பங்கள் வந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கேற்ப, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த, 17ம் தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள, 269 ஓட்டுச்சாவடி மையங்களில் இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடந்தது. அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்களில் நடந்த முகாமில், பெயர் சேர்க்க, படிவம் - 6, பெயர் நீக்கத்துக்கு படிவம் - 7, வாக்காளர் அட்டையில் திருத்தத்துக்கு படிவம் - 8ம் பூர்த்தி செய்து பெறப்பட்டது. தொகுதிக்குள் முகவரி மாற்றத்துக்கு படிவம் - 8ஏ பெறப்பட்டது.தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி தொகுதியில் நடந்த சிறப்பு முகாமில், பெயர் சேர்க்க, 3,749 விண்ணப்பங்களும்; பெயர் நீக்கம் செய்ய, 7, 889; வாக்காளர் அட்டையில் பெயர் திருத்தத்துக்கு, 621; முகவரி மாற்றத்துக்கு, 280, என மொத்தம், 5,539 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.வால்பாறை தொகுதியில், பெயர் சேர்க்க, 4,301 விண்ணப்பங்கள்; பெயர் நீக்கத்துக்கு, 558; வாக்காளர் அட்டையில் திருத்தத்துக்கு, 445; முகவரி மாற்றத்துக்கு, 102, என, மொத்தம், 5,406 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளில் நடந்த சிறப்பு முகாம்களில், 10,945 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மட்டும், 8,050 பேர் விண்ணப்பித்துள்ளனர்.மேலும், இரண்டாம் கட்ட முகாம், டிச., 12 மற்றும், 13ம் தேதிகளில் ஓட்டுச்சாவடி மையங்களில் நடக்கும். இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.