மதுரை : மறு நிர்ணயம் செய்யப்பட்ட புதிய ஊதியம், வேளாண் தொழில்நுட்ப அலுவலர்கள் தற்போது பெற்றுவரும் ஊதியத்தை விட குறைவாக இருப்பதால் அதை ரத்து செய்து திருத்த ஆணை வழங்குமாறு, அரசு வேளாண் பட்டதாரிகள் சங்கத்தலைவர் சுரேஷ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது:வேளாண் துறையில் வேளாண் அலுவலர், வேளாண் உதவி இயக்குனர், துணை இயக்குனர், இணை இயக்குனர் ஆகிய தொழில்நுட்ப அலுவலர்களுக்கு ஊதிய குறைதீர்க்கும் குழு பரிந்துரை படி ஊதியம் குறைக்கப்பட்டு புதிய ஊதிய நிர்ணய ஆணை வழங்கப்பட்டது. இந்த ஊதியம், தற்போது பெற்று வரும் ஊதியத்தை விட குறைவாக உள்ளது. சமநிலையில் இருந்த கால்நடை துறை அலுவலர் களுக்கு ஊதியம் உயர்த்தப் பட்டுள்ளது.
அதேநேரத்தில் தொழில்நுட்பம் அல்லாத அமைச்சு பணியாளர்களுக்கு இணையாக எங்களுக்கு ஊதியம் குறைக்கப் பட்டுள்ளது. எனவே ஏழாவது ஊதியக்குழுவில் வேளாண்மை மற்றும் கால்நடை அலுவலர்களுக்கு இணையாக ஊதிய நிர்ணயம் செய்து திருத்த ஆணை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.