மதுரை : மதுரையில் கட்டணம் செலுத்த முடியாததால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் 7 பேர் மருத்துவ படிப்பில் சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 21 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். 7.5 சதவீதம் ஒதுக்கீட்டின் அடிப்படையில் தற்போது வரை 13 பேர் மருத்துவ படிப்புகளை தேர்வு செய்தனர். மீதம் 8 பேரில் கட்டணம் செலுத்த வசதியில்லாததால் மேலுார் அரசு பள்ளி மாணவி யாழினி, கவுன்சிலிங்கில் பங்கேற்க வில்லை. மீதமுள்ள மேலக்கோட்டை முத்துக் குமார், லிங்கேஸ்வரன், விக்கிரமங்கலம் தங்கப்பேச்சி, சமயநல்லுார் வைரமீனா, கள்ளிக்குடி பிரியா ஆகிய மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்று கட்டணம் செலுத்த இயலாத காரணத்தால் இடம் தேர்வு செய்யவில்லை.
கள்ளிக்குடி மாணவர் லிங்கப்பாண்டி நீட் தகுதி பெற்றும் தரவரிசை பட்டியலில் இடம் பெறவில்லை.இந்நிலையில் 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.மாணவி தங்கபேச்சி கூறுகையில் “கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் தான் கல்லுாரியை தேர்வு செய்யவில்லை. தற்போது அரசே கட்டணத்தை ஏற்கும் என்ற அறிவித்துள்ள நிலையில் எங்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும்” என்றார்.சி.இ.ஓ., சுவாமிநாதன் கூறுகையில் “இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவிற்காக காத்திருக்கிறோம்” என்றார்.