பொள்ளாச்சி : பொள்ளாச்சி நேரு நகரில், பெரிய குழியால் விபத்துகள் ஏற்படுவதால், வாகன ஓட்டுனர்கள், மக்கள் சிரமப்படுகின்றனர்.
பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நேருநகரில், மேம்பாலத்துக்கு கீழே உள்ள சர்வீஸ் ரோட்டை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட ரோடு சீரமைக்கப்படவில்லை.இந்த ரோட்டில் தற்காலிகமாக மண் கொட்டப்பட்டது; சமப்படுத்தாமல் உள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.மக்கள் கூறியதாவது: பொள்ளாச்சி நேருநகரில், டெலிபோன் கேபிள் பதிக்கவும், பாதாள சாக்கடை திட்டத்துக்காகவும் தோண்டப்பட்ட ரோடு மோசமாக உள்ளது.
ரோடு மேடு, பள்ளமாக இருப்பதால் வாகனங்கள் செல்ல முடிவதில்லை. ரோட்டில் பெரிய குழி மூடப்படாமல் உள்ளதால், இரவு நேரங்களில் வருவோர் தவறி விழுகின்றனர். சில நாட்களுக்கு முன், குழியில் விழுந்து மூதாட்டி காயமடைந்தார். குழந்தைகளும் விளையாடும் போது தவறி விழும் அபாயம் உள்ளது.இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரோட்டை சமப்படுத்தி வாகன ஓட்டுனர்கள் சென்று வர வசதி ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.