ஊட்டி : ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில், 'துாய்மை இந்தியா' திட்ட மானிய தொகையில், 29 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்தது குறித்து, அதிகாரி மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கிராம ஊராட்சி பகுதிகளில், வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் குடும்பங்கள் கழிப்பிடம் அமைத்து பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு, மானியம் வழங்குகிறது. 'துாய்மை பாரத இயக்கம்' மற்றும் தேசிய வேலை உறுதி திட்டத்தின் வாயிலாக, கழிப்பிடம் இல்லாத வீடுகளில் கழிப்பிடம் அமைக்க, 12 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில், 2018-19ம் ஆண்டில், வட்டார வளர்ச்சி அலுவலராக பணியில் இருந்த நாகராஜ், 50, என்பவர், வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த போது, ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, துானேரி, எப்பநாடு, நஞ்சநாடு, கூக்கல்தொரை உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில், தனி நபர் கழிப்பிடம் கட்டியதாக, கணக்கு காண்பித்து, 29 லட்சம் ரூபாய் வரை சுருட்டியது அம்பலமானது. பிரபாகரன் என்பவரின் வங்கிக் கணக்கில், பணத்தை டெபாசிட் செய்தது, விசாரணையில்தெரியவந்துள்ளது.
இவர் தற்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில், உதவி கண்காணிப்பாளராக பணி புரிந்து வருகிறார்.நீலகிரி லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு டி.எஸ்.பி., சுகாசினி கூறுகையில், ''சென்னை, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையின் உத்தரவுப்படி, நாகராஜ் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகிறோம்,''என்றார்.