வடவள்ளி : ரேஷன் அரிசி கடத்தல் குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம். வாடகைக்கு வீடு பிடித்து, ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து, கடத்தி வந்தவரை அறிவீர்களா...இதோ தெரிந்து கொள்ளுங்கள்.
பிடிபட்டவர் ஒரு பெண் என்பதுதான் இதில் ஆச்சரியம்! வீரகேரளம் நகர கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ், 29 பகுதி மற்றும் முழு நேர ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், கடை எண். 33 என்ற ரேஷன் கடை, கல்வீரம்பாளையத்தில் செயல்பட்டு வருகிறது. இக்கடையில், பிரியா என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இந்த ரேஷன் கடைக்கு எதிரே உள்ள வீட்டில், சட்டவிரோதமாக ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, வழங்கல் துறைக்கு தகவல் கிடைத்தது.நேற்று முன்தினம் இரவு, மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன் மற்றும் பறக்கும் படை தாசில்தார் சிவகுமார் ஆகியோர், அந்த வீட்டில் நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது, ரேஷன் கடை விற்பனையாளர் பிரியா, அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து, கணக்கில் வராத, 164 ரேஷன் அரிசி மூட்டைகளை, சட்ட விரோதமாக வைத்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இரவு நேரம் என்பதால், ரேஷன் அரிசி வைக்கப்பட்டிருந்த வீட்டை பூட்டி சீல் வைத்தனர். நேற்று காலை, தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள், பூட்டை திறந்து, சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 164 ரேஷன் அரிசி மூட்டைகளை, பூசாரிபாளையத்தில் உள்ள குடோனுக்கு கொண்டு சென்றனர்.விற்பனையாளர் பிரியாவை, 'சஸ்பெண்ட்' செய்துள்ளதாக, வீரகேரளம் கூட்டுறவு சங்க செயலாளர் முருகேஷ் தெரிவித்தார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன், வீரகேரளம் பகுதியில் தனியார் குடோனில், சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 7 டன் எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகளை, போலீசார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன் கூறுகையில், "கூட்டுறவு உதவி பதிவாளர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில், ஆய்வு செய்தோம். ஆய்வில், கணக்கில் வராத, ரேஷன் அரிசி மூட்டைகள், வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து, விசாரித்து வருகிறோம்," என்றார்.ஒரு விற்பனையாளர், அதுவும் ஒரு பெண் இத்தனை மூட்டைகளை தனியாளாக, பதுக்கி வைத்திருக்க வாய்ப்பில்லை. இவருக்கு உடந்தையாக இருந்தவர்களை கண்டுபிடித்து, அவர்கள் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.