பேரூர் : வனத்துறையில் மனித - வனவிலங்கு மோதலை தவிர்க்க, மூன்று சிறப்பு இரவு ரோந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை வனக்கோட்டம் போளுவாம்பட்டி வனச்சரக கிராமங்களில், சில நாட்களுக்கு முன், இரண்டு மூதாட்டிகள் யானை தாக்கி பலியாகினர்.அதையடுத்து, ஊருக்குள் புகும் யானைகளை கண்காணித்து விரைந்து செயல்பட, ஆல்பா, பீட்டா, காமா என்ற, மூன்று சிறப்பு இரவு ரோந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.முதல் குழுவான 'ஆல்பா'வில், மூன்று பிரிவுகள் உருவாக்கப் பட்டுள்ளன. முதல் பிரிவு, மதுக்கரை - முள்ளாங்காடு வரையும், இரண்டாம் பிரிவு, முள்ளாங்காடு - நரசீபுரம் வரையும், மூன்றாம் பிரிவு, நரசீபுரம் - கெம்பனுார் வரையும் கண்காணிக்கும்.
இரண்டாம் குழுவான 'பீட்டா'வின் முதல் பிரிவு, கெம்பனுார் - சி.ஆர்.பி.எப்., வரையும், இரண்டாம் பிரிவு, சி.ஆர்.பி.எப்., - பாலமலை வரையும், மூன்றாம் பிரிவு, பாலமலை - தோலம்பாளையம் வரையும் கண்காணிக்கும்.மூன்றாம் குழுவான 'காமா'வின் முதல் பிரிவு, தோலம்பாளையம் - கண்டியூர், இரண்டாம் பிரிவு, கண்டியூர் - ஓடந்துறை, மூன்றாம் பிரிவு, ஓடந்துறை - புதுக்காடு வரை கண்காணிக்கும்.ஒவ்வொரு குழுவும், மாலை நான்கு மணியிலிருந்து, மறுநாள் காலை ஏழு மணி வரை, ரோந்து பணியை மேற்கொள்ளவுள்ளது.
இக்குழுக்கள், வனச்சரகர்கள் பழனிராஜா, சரவணன், ஆனந்தகுமார் மேற்பார்வையில் இயங்கும். ஒரு சரகத்தில் இருந்த யானை விரட்டும் காவலர்கள், தற்போது மத்திய படையாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், எந்த சரகத்தில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதோ, அங்கு அனுப்பப்பட உள்ளனர்.இதர பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதன் வாயிலாக, அவர்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வு கிடைக்கும். இக்குழுக்களுக்கு, தனி வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், பிற அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட உள்ளன.