கோவை : கோவை மாநகராட்சிக்கு கட்டணம் வசூலிக்காமல், முறைகேடாக, பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவது கண்டறியப்பட்டதால், பொறியியல் பிரிவினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கோவை நகர் பகுதியில், விடுபட்ட இடங்களில், பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படுகிறது. உக்கடம் பெரிய குளத்தை சுற்றியுள்ள பகுதியில் வசிப்போருக்கு, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் இணைப்பு வழங்கி விட்டு, 10 தவணைகளாக பிரித்து, சொத்து வரியுடன் சேர்த்து, வசூலிக்கும் வகையில், இணைப்பு வழங்கப்படுகிறது. மற்ற இடங்களில், 'டிபாசிட்' தொகை மற்றும் இணைப்பு கட்டணம் செலுத்த வேண்டும்.ஆனால், 'லீக்கேஜ்' என சொல்லி, குழி தோண்டி, வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படுகிறது.
குறிப்பிட்ட தொகையை உதவி/ இளம் பொறியாளர்களில் சிலர் வசூலிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதன் காரணமாக, மாநகராட்சிக்கு கிடைக்க வேண்டிய வருவாய் பாதிக்கிறது. இவ்விஷயம், உயரதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.அதைத்தொடர்ந்து, பொறியியல் பிரிவினருக்கான ஆலோசனை கூட்டம், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேற்று நடத்தப்பட்டது; துணை கமிஷனர் மதுராந்தகி தலைமை வகித்தார். நகர பொறியாளர் லட்சுமணன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், 'பாதாள சாக்கடை இணைப்புக்கு விண்ணப்பம் பெற்று, பதிவேடு பராமரிக்க வேண்டும்.
அதற்குரிய கட்டணத்தை, மாநகராட்சியில் செலுத்திய பிறகே, இணைப்பு வழங்க வேண்டும். முறைகேடு செய்வது தெரியவந்தால், நடவடிக்கை கடுமையாக இருக்கும்''குடிநீர் இணைப்பு வழங்குவதில், பிளம்பர்கள் தலையீடு அதிகரித்திருப்பதாக, புகார்கள் வருகின்றன. நிர்ணயிக்கப் பட்ட கட்டணம் செலுத்திய பின், குடிநீர் இணைப்பு உத்தரவை, விண்ணப்பதாரரிடம் மட்டும் வழங்க வேண்டும்' என, துணை கமிஷனர் அறிவுறுத்தினார்.கூட்டத்தில், நிர்வாக பொறியாளர்கள், உதவி நிர்வாக பொறியாளர்கள், உதவி/ இளம் பொறியாளர்கள் பங்கேற்றனர்.