திருப்பூர் : சொத்துக்காக, கொலை மிரட்டல் விடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, குழந்தைகளுடன் வந்த தாய், கண்ணீர் மல்க முறையிட்டார்.
திருப்பூர் அருகே கணக்கம்பாளையம், மேற்கு வீதியை சேர்ந்தவர் சவிதா, 34. இவரது கணவர் ரவி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன், கணவர் இறந்து விட்டார். தனது சொத்துக்களை பறிக்க, மாமனார், மாமியாரை, சிலர் மிரட்டுவதாக, நேற்று கலெக்டர் மற்றும் எஸ்.பி., அலுவலகத்தில் முறையிட்டார்.இது குறித்து, சவிதா கூறியதாவது:என் கணவர் இறந்த பின், மாமனார் மன உளைச்சலால் உடல்நிலை பாதித்த நிலையில் உள்ளார். இச்சூழலில், அவரது உறவினர்கள், இருவரையும் மிரட்டுகின்றனர்.
கணபதிபாளையத்தில் உள்ள, 80 சென்ட் நிலம், கணக்கம்பாளையத்தில் உள்ள, 5.92 ஏக்கர் நிலத்தை, அவர்கள் பெயரில் உயில் எழுதி வாங்க முயற்சி செய்கின்றனர். கேள்வி கேட்டதால், குழந்தைகளையும், என்னையும் கொன்று விடுவதாக மிரட்டுகின்றனர்.எனது கணவர் ஒரே வாரிசு என்பதால், அவருக்கு பின், எனக்கும், என் குழந்தைகளுக்கு அதில் உரிமை உள்ளது. எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென, கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.