திருப்பூர் : திருப்பூர் மாநகர் மாவட்டத்தில், பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, மதுக்கடை திறக்க முயற்சிப்பது, ஆளுங்கட்சி வட்டாரத்திலும் கடும் அதிருப்தி அலையை உருவாக்கியுள்ளது.
திருப்பூர் மாநகர் மாவட்டத்தில், முன்னாள் மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ.,கள் என, தனித்தனி கோஷ்டிகள் இயங்கி வந்தன. மாவட்ட செயலாளர் மீது இருந்த அதிருப்தியால், பல்வேறு சார்பு அணி செயலாளர்களும், மாற்று அணியின் பக்கம் சென்றுவிட்டனர்.எதிர்கோஷ்டியில் உள்ளவர்களை வலைவீசி பிடிக்க, புதிய மதுக்கடை திறந்து, 'பார்' ஒதுக்கப்படும் என்ற, வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, இளைஞர்களை இழுத்து, சில இடங்களில் புதிய பார்களும் முளைத்தன.
படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என்ற முதல்வரின் வாக்குறுதியை மீறும் வகையில், புதிய கடை திறக்க, 'மாஜி' நிர்வாகிகள் போட்டி போட்டு களமிறங்கியுள்ளது கடும் அதிருப்தி அலையை உருவாக்கியுள்ளது.தெற்கு தொகுதிக்குள் புதிய கடை திறக்க, எம்.எல்.ஏ., அனுமதிக்காததால், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி வார்டு, அவிநாசியின் புறநகர் பகுதி என இடங்களை தேர்வு செய்து, கடை திறக்க முயற்சி நடக்கிறது.பிரச்னைக்குரிய கடைகளை மூட வேண்டிய சூழல் உருவாகியுள்ள நிலையில், பாண்டியன் நகர், சாந்தி தியேட்டர் பகுதி, அண்ணா நகர், பூண்டி நால்ரோடு, வஞ்சிபாளையம், பழங்ரை ஆகிய பகுதிகளில், 'பார்' வசதியுடன் கடை திறக்கும் தகவல் அறிந்து, போராட்டம் வலுத்து வருகிறது.
இதேநிலை தொடர்ந்தால், சட்டசபை தேர்தலில் கடும் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என, கட்சி தலைமைக்கு புகார் பறந்துள்ளது.அ.தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:ஏற்கனவே செயல்படும் கடையை மூட வேண்டுமென மக்கள் போராடும் நிலையில், அருகிலேயே, மற்றொரு கடை திறப்பது, கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. மாநகர் மாவட்ட செயலாளர் மாற்றத்துக்கு இதுவும் முக்கிய காரணம்.படிப்படியாக மதுக்கடையை மூடாமல், எதிர்ப்பையும் மீறி, மதுக்கடை திறக்க முயற்சிப்பது, கண்டனத்துக்குரியது. புதிய மாவட்ட செயலாளர், மக்கள் எதிர்ப்பை சம்பாதிக்காமல், புதிய மதுக்கடை திறக்கும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.