ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த வாலீஸ்பேட்டையைச் சேர்ந்தவர் சின்னப்பராஜ், 53; இவர் அரியலுார் மாவட்டம் வரதராஜன்பேட்டையில் டான்போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக உள்ளார்.கடந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி சின்னப்ப ராஜ்குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள மகன்கள் வீட்டிற்கு சென்றார்.வீட்டின் பின் கதவை கொள்ளையர்கள் உடைத்து நகைகளை திருடி சென்றனர்.ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப் பதிந்து திருடர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வினதா மற்றும் போலீசார் ரோந்துப்பணி மேற்கொண்டனர். நாச்சியார்பேட்டைஅருகே நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.இதில் வடலுார் அடுத்த கருங்குழியைச்சேர்ந்த செந்தில்குமார்,24, திட்டக்குடி அடுத்த ரெட்டக்குறிச்சி சஜீவ்,35; என தெரிந்தது. இவர்கள் இருவர் மற்றும் ஒருவர் சின்னப்பராஜ் வீட்டில் திருடியது தெரிந்தது.இருவரையும் கைது செய்து, சஜீவ் வீட்டின் பின்புறம் கோழி கூண்டுக்கு அடியில் புதைத்து வைத்திருந்த ரூ.7.50 லட்சம் 25 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.கொள்ளையில் தொடர்புடைய மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.