கடலுார்: மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மருத்துவ ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும் என, அமைச்சர் உத்தரவிட்டார்.
கடலுார் மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் சம்பத் ஆய்வு செய்தார். தேவனாம்பட்டினம் புயல் பாதுகாப்பு மையத்தில், மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் கையிருப்பு உள்ளதா, மருத்துவ வசதிகள் உள்ளதா என கேட்டறிந்தார்.மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங்பேடி, கலெக்டர் சந்திரசேகர சகாமுரி உடனிருந்தனர்.அப்போது அமைச்சர் சம்பத் கூறுகையில், முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மின் துண்டிப்புகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலுார் மாவட்டங்களில் இருந்து 300 மின் ஊழியர்கள் வந்துள்ளனர். தேவைக்கேற்ப மேலும் வரவழைக்கப்படுவர்.புயல் கரையை கடந்து முடியும் வரை யாரும் வெளியில் செல்லவேண்டாம். மரங்கள், மின் கம்பங்களுக்குஅருகில் செல்ல வேண்டாம். அத்தியாவசிய உணவு பொருட்கள்,குடிநீர், மெழுகுவர்த்தி, பேட்டரி விளக்கு, தீப்பெட்டி தயாராக வைத்துக்கொள்ளவும், பழைய கட்டடங்களில் தங்கவோ,அருகில் செல்லவோ வேண்டாம், நீர்நிலைகளில் குளிக்கவோ கடந்து செல்லவோ வேண்டாம்,மாவட்டத்தில் அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் முழுநேரமும் மருத்துவ ஊழியர்கள் பணியில் இருக்கவும், மருந்து, மாத்திரைகள் இருப்பு வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் தொடர்பாக வதந்திகளை பொது மக்கள் நம்ப வேண்டாம் என, தெரிவித்தார்.