ராமநாதபுரம்:ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் சில கோப்புகள் எங்கு உள்ளன என்று தெரியவில்லை, என தகவல் அறியும் உரிமை சட்ட மனுவிற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் நகராட்சியில் நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப ஒருங்கிணைந்த புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கான வாய்ப்பு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வக்கீல் திருமுருகன் விளக்கம் கேட்டுள்ளார்.நகராட்சி பொது தகவல் அலுவலர் அறிவுச்செல்வன் பதில் அளித்துள்ளார். அதில், 1992ல் புதிய பஸ் ஸ்டாண்ட் 18 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், பழைய கட்டடத்தில் இருந்து புதிய கட்டடத்திற்கு நகராட்சி அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்ட போது கோப்புகளும் இடமாற்றப்பட்டுள்ளன.
இதனால் பழைய பஸ்ஸ்டாண்ட் மற்றும் ஒருங்கிணைந்த புதிய பஸ் ஸ்டாண்ட் குறித்த கோப்புகள் எங்குள்ளன, என்பதை அறிய முடியவில்லை.நகராட்சியில் தற்போது 103 கடைகள் உள்ளன. ஆண்டிற்கு ரூ.6.68 லட்சம் வாடகை நிர்ணயிக்கப்படுகிறது. 2010 முதல் பஸ்ஸ்டாண்ட் பராமரிக்க அரசு நிதி ஒதுக்கவில்லை. நகராட்சி பொது நிதியில் 2010 முதல் இதுவரை ரூ.13 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.