பொள்ளாச்சி:சார்பதிவாளர் அலுவலகங்கள் நேற்று 'நிவர்' புயல் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டதால், முன்பதிவு செய்த டோக்கன்களுக்கு, மறுநாள் பதிவில் முன்னுரிமை வழங்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 'நிவர்' புயல் காரணமாக, நேற்று அரசு அலுவலங்களுக்கு விடுமுறையளிக்கப்பட்டது. இதில், சார்பதிவாளர் அலுவலகங்களில் நேற்று முன்பதிவு செய்த டோக்கன்கள் தொடர்பாக, பத்திரப்பதிவு செய்யவில்லை.இந்த டோக்கன்களை உடனடியாக ரத்து செய்து, மீண்டும் டோக்கன் பதிவு செய்ய இணையதளத்தில் அனுமதிக்காததால்,இன்று பத்திர பதிவு செய்வதற்கு டோக்கன் கிடைக்கவில்லை.
இதனால், மற்றொரு தினத்தில் மீண்டும் முன்பதிவு டோக்கன் செய்து பத்திர பதிவு மேற்கொள்ள வேண்டும் என்பதால், மக்கள் கடும் அதிருப்திஅடைந்துள்ளனர்.ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில், தினமும், 90 டோக்கன்கள் முன்பதிவு செய்யப்படுகிறது. அதன்படி, இன்று (26ம் தேதி) விசேஷ தினத்திற்கு நேற்றே முன்பதிவு முடிந்துவிட்டது.
இதனால், நேற்று பதிவுக்கு வந்த டோக்கன்கள் அனைத்தும், மற்றொரு நாளுக்கு முன்பதிவு செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.இதுபோன்ற, இயற்கை இடர்பாடுகளின்போது, முன்பதிவு செய்யப்பட்ட பத்திரங்களுக்கு மறுநாள் பத்திரப்பதிவு செய்வதற்கு முன்னுரிமை வழங்க, இணையதளத்தில் வசதி மேம்படுத்த வேண்டும், என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.