ஈரோடு: கோபியில், கொடிவேரி அணை பாசனதாரர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. நிர்வாகி சுபிதளபதி தலைமை வகித்தார். கூட்டத்தில், தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால்களை சீரமைத்தல், புதுப்பித்தல் போன்ற பணிகளுக்கு அரசு மூலம், 147.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாய்க்கால் சீரமைப்பு பணிக்காக, ஜனவரி முதல் ஏப்ரல் வரை, நான்கு மாதங்களுக்கு நீர் நிறுத்தம் செய்ய ஒப்புதல் வழங்குவது. ஏப்., இறுதியில் இரண்டாம் போகத்துக்கான நீர் திறப்பை, அரசு உறுதி செய்ய வேண்டும். சீரமைப்பு பணிகள் தரமானதாக மேற்கொள்வதை உறுதி செய்ய, அனைத்து பாசன சபைகளும் அடங்கிய குழுவை நியமிப்பது. கொடிவேரி பாசன பகுதிகளில், முதல் போக நெல் அறுவடை பணி விரைவில் துவங்கவுள்ளதால், டிச., 10 முதல் பாசன பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை மீறி, பவானி ஆற்றில் இருந்தும், வாய்க்கால்களில் இருந்தும் ராட்சத மின் மோட்டர்களை கொண்டு, நீர் திருடும் கும்பல் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.