தர்மபுரி: 'நிவர்' புயல் தொடர்பாக, தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, பேரிடர் தடுப்பு கட்டுப்பாட்டு அறையை, மாவட்ட கலெக்டர் கார்த்திகா பார்வையிட்டார்.
தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 'நிவர்' புயல், திருவண்ணாமலை மாவட்டம் வழியாக, கரையை கடந்து செல்கிறது. இதன் எல்லையோரத்தில், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பெரியபட்டி, நரிபள்ளி, கோட்டப்பட்டி, பைரநாயக்கன்பட்டி, சிட்லிங், எஸ்.தாதம்பட்டி உள்ளிட்ட, ஆறு வருவாய் கிராமங்கள் அமைந்துள்ளன. அப்பகுதிகளில் புயலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால், இங்கு, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. பேரிடர் மீட்பு பணிகளில், பயிற்சி பெற்ற தீயணைப்பு, மீட்பு பணி வீரர்கள் மற்றும் போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்புக்கள் ஏற்பட்டால், பொதுமக்களை மீட்டு, தங்கவைக்க அரசு பள்ளிகள், சமுதாய கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் அச்சமின்றி இருக்கலாம். 'நிவர்' புயலுக்காக தர்மபுரியில், 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு கட்டுப்பாடு அறை திறக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு குறித்து பொதுமக்கள், கட்டணம் இல்லாத தொலைபேசி எண்ணான, 1077ல் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.