அரூர்: ''பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி குறித்து, கருத்து கூறுவது நாகரிகமாக இருக்காது,'' என, முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான கருணாஸ் கூறினார்.
தர்மபுரி மாவட்டம் அரூரில், நேற்று அவர், நிருபர்களிடம் கூறியதாவது: மக்களின் பாதுகாப்புக்காக, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு வரவேற்கத்தக்கது. புயல் சீற்றத்தின்போது, படகுகள், வலைகள் சேதமடையாமல் இருக்க, தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும் என்ற, மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை, அமைச்சர் ஜெயக்குமார் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. சசிகலா சிறையிலிருந்து வெளியே வருவது குறித்தும், அ.தி.மு.க.,வின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்தும், அ.தி.மு.க.,வினர் கூறுவது, அவர்களது கட்சியின் நிலைப்பாடு. இது குறித்து தோழமை கட்சியான, முக்குலத்தோர் புலிப்படை கட்சி, கருத்து சொல்வது நியாயமாகவும், தர்மமாகவும் இருக்காது. பா.ஜ., - அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துக் கொள்வது, இரண்டு பெரிய கட்சிகளும் எடுத்த தீர்க்கமான முடிவு. தேர்தலுக்கு இன்னும், ஆறு மாதம் உள்ள நிலையில், கூட்டணி குறித்து, இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற நான், கருத்து சொல்வது நாகரிகமாக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.