கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே உள்ள, கொங்கன்செருவு பகுதியை சேர்ந்தவர் பெருமாள், 50; இவர், தற்போது குடும்பத்துடன் சூளகிரியில் தங்கி, ஓட்டல் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, கொங்கன்செருவிலுள்ள இவரது குடிசை வீடு தீப்பிடித்துள்ளது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக பர்கூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நிலைய அலுவலர் செங்குட்டுவேலு தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள், அருகிலிருந்த வைக்கோல் போரிலும் தீ பரவியது. இதில், குடிசை வீடு மற்றும் வைக்கோல் போர் முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும், வீட்டிலிருந்த, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இது குறித்து, பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.