ஓசூர்: கிருஷ்ணகிரி, கலெக்டர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றிய வாலிபர், ஆறு ஆண்டுக்கு முன் மாயமான நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த உரிகத்தை சேர்ந்தவர் பாலமுருகன், 32. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த, 2014 ஆக., 4ல், வீட்டிலிருந்து, பெங்களூரு புறப்பட்டு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக, அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் ஏதும் செய்யவில்லை. ஆறு ஆண்டுகளாக பாலமுருகன் பணிக்கு செல்லாததால், அவரது நிலை என்ன என, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்து, அவரது குடும்பத்தாரிடம் கேட்கப்பட்டது. அப்போது, அவர் மாயமானது தெரிந்ததால், போலீசில் புகார் செய்ய, அவரது குடும்பத்தாருக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன்படி, அவரது அண்ணன் கிருஷ்ணன், 35, நேற்று முன்தினம் அஞ்செட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான அரசு ஊழியர் பாலமுருகனை தேடி வருகின்றனர்.