கிருஷ்ணகிரி: 'நிவர்' புயலை எதிர்கொள்ள தீயணைப்புத்துறை தயார் நிலையில் உள்ளதாக, மாவட்ட தீயணைப்பு அலுவலர் தெரிவித்துள்ளார். 'நிவர்' புயலையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மீட்பு பணிகள் மேற்கொள்ள, அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராமச்சந்திரன் கூறியதாவது: 'நிவர்' புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, கிருஷ்ணகிரி மாவட்ட தீயணைப்புத்துறை தயார் நிலையில் உள்ளது. மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை உள்ளிட்ட ஏழு தீயணைப்பு நிலையங்களில், 90 தீயணைப்பு வீரர்கள், 24 மணி நேரமும் தயாராக உள்ளனர். கிருஷ்ணகிரி, ஓசூர் நகர பகுதிகள், மலை கிராமங்கள் மற்றும் நீர்நிலைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும், ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்துக்கும் படகுகள், மீட்பு பணி உபகரணங்கள், தளவாட பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். இதேபோல், பர்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்தில், கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. புயல் மற்றும் இயற்கை சீற்றங்களினால் பாதிப்பு ஏற்பட்டால், பர்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்துடன், பொதுமக்கள், 04343- 265601, 94450 86363, 101, 108 மற்றும், 112 ஆகிய எண்களில், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.