ஓசூர்: சூளகிரி அருகே, கனரக வாகனங்கள் செல்ல முடியாத அளவில் உள்ள சிறிய பாலத்துக்கு பதில், அதை உயர்மட்ட பாலமாக அமைக்க ஆய்வு நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சின்னாறு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, பந்தர்குட்டை, கர்னபள்ளி, முருக்கனபள்ளி, கொண்டப்பட்டி, எர்ரப்பன் பயில், கோவில் எப்பளம் ஆகிய கிராமங்களுக்கு தார்ச்சாலை செல்கிறது. இச்சாலையின் குறுக்கே சிறிய அளவிலான தரைமட்ட பாலம் உள்ளது. இது மிகவும் குறுகலாக உள்ளதால், லாரி மற்றும் பஸ் போன்ற கனரக வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால், நடைபயணமாகவும், இருசக்கர வாகனம் மூலமாகவும் தான், பல்வேறு பகுதிகளுக்கு மக்கள் சென்று வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, உயர்மட்ட பாலமாக அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, புதிய உயர்மட்ட பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பி, ஓரிரு வாரத்தில் பணியை துவங்க, சூளகிரி ஒன்றிய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், சூளகிரி ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத், வட்டார வளர்ச்சி அலுவலக பொறியாளர் விமலா, துணை பொறியாளர் மாதையன் ஆகியோர், பாலம் உள்ள பகுதியை நேற்று ஆய்வு செய்தனர்.