கரூர்: 'வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் ஆளுங்கட்சி தலையீட்டால் முறைகேடு நடக்கிறது' என, தி.மு.க., மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான செந்தில் பாலாஜி சார்பில், கரூர் கலெக்டர் மலர்விழியிடம் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாம் நடந்து வருகிறது. இதில், மோசடியாக பெயர் சேர்த்தல், போலி முகவரி மாற்றம் ஆகியவை செய்யப்பட்டு வருகிறது. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் கூட, அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். இறந்த வாக்காளர்கள் பெயர் நீக்க செய்ய வேண்டும் என்று மனு அளித்தால், இறப்பு சான்றிதழ் கட்டாயம் வேண்டும் என்று நிராகரிக்கின்றனர். இந்த முகாம் முடிவடைந்த பின், அன்று வரப்பெற்ற படிவம் குறித்து விபரம் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படவில்லை. இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை. மேலும், படிவம் கொடுத்தால், அதற்குரிய ஒப்புகை சீட்டு வழங்கவில்லை. ஆளுங்கட்சி ஆலோசனைப்படி, வாக்காளர் பட்டியல் தயார் செய்வதாக தெரிகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால், வழக்கு தொடரப்படும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.