கரூர்: வாங்கப்பாளையம் சாலையில், கொட்டப்பட்டுள்ள குப்பையை சுற்றி கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால், துர்நாற்றம் வீசுகிறது.
கரூர் அருகே வாங்கப்பாளையம் சாலையில், 350க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த சில நாட்களாக, அப்பகுதியில், கொட்டப்பட்ட குப்பை அள்ளப்படாமல் பல மாதங்களாக தேங்கியுள்ளது. மேலும், வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குப்பையுடன் சேர்ந்துள்ளதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், தொடர் மழை காரணமாக அதிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் எந்த பயனும் இல்லை என, மக்கள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில், கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. தொற்றுநோய் பரவும் அபாயத்தில் பகுதியினர் உள்ளனர். குப்பையை அவ்வப்போது சிலர் எரிக்கின்றனர். அப்போது, சாலை முழுவதும் புகை மண்டலமாக உள்ளதால், எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். எனவே, குப்பையை அகற்றி, தீ வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.