ஈரோடு: சபரிமலை பிரசாதம் பெற, இதுவரை இரண்டு பேர் மட்டுமே, தபால் நிலையத்தில் பதிவு செய்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக, வழிபாட்டு தலங்களுக்கு செல்ல, பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கேரளா மாநிலம், சபரிமலைக்கு ஆண்டுதோறும் தமிழகத்தில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து, இருமுடி கட்டி குழு, குழுவாக செல்வது வழக்கம். தற்போது தினமும், 1,000 பேர், சனி, ஞாயிறு நாட்களில், 2,000 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, கொரோனா இல்லை என்ற சான்றிதழ் பெற்றுக் கொண்டு வருபவர்களை மட்டுமே, கேரளா மாநில சுகாதாரத்துறை அனுமதிக்கின்றனர். இதனால், சபரிமலை தேவஸம் போர்டு, இந்திய தபால் துறையுடன் இணைந்து, கோவிலுக்கு வர முடியாத பக்தர்களின் வீடு தேடி சென்று, தபால் மூலம் ஐயப்ப பிரசாதம் வழங்கும் திட்டம் செயல்படுத்தியது. தபால் நிலையத்தில், 450 ரூபாய் செலுத்தி பிரசாதத்தை பதிவு செய்து கொள்ளலாம். ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் கடந்த, 21ல், இத்திட்டம் துவங்கப்பட்டது. மக்கள் ஆர்வம் காட்டாததால், நேற்று வரை இரண்டு பேர் மட்டுமே பணம் கட்டி பதிவு செய்துள்ளனர். இது குறித்து தபால்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஈரோட்டில் இதுவரை, இருவர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். கொரோனாவால், தபாலில் பிரசாதம் பெற மக்கள் தயக்கம் காட்டுகின்றனர்,' என்றனர்.