திருப்பூர்:கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் நேற்று, நாடுமுழுவதும் பொது வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது.இதற்கு, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் ஆதரவு அளித்தது. வங்கிகளை தனியாருக்கு வழங்க கூடாது; வராக்கடன்களை வசூலிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.திருப்பூரில் நேற்று, வங்கிகள் திறக்கப்பட்டிருந்தபோதும், கிளர்க், உதவி பணியாளர்கள் பணிக்கு வரவில்லை. அதனால், பண பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டன.வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் மனோகரன் கூறுகையில், ''திருப்பூர் மாவட்டத்தில், அகில இந்திய வங்கி ஊழியர் சங்க உறுப்பினர்கள் 3,500 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதனால், காசோலை பரிவர்த்தனை உட்பட, 80 சதவீத வங்கி பணிகள் முடங்கின,'' என்றார்.