திருப்பூர்:அங்கேரிபாளையம் ரோட்டில் இணைப்பு சாலை பணி அரைகுறையாக நடந்ததால், அந்த ரோடு புழுதிக்காடாக காட்சியளிக்கிறது.திருப்பூர், அவிநாசி ரோட்டையும், அங்கேரிபாளையம் ரோட்டையும் இணைக்கும் வகையில், எஸ்.ஏ.பி., தியேட்டர் பகுதியில் ஒரு ரோடு அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், பனியன் தொழில் நிறுவனங்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன.
இரண்டு பிரதான ரோடுகளை இணைக்கும் ரோடு என்பதால், இந்த ரோட்டில் வாகன போக்குவரத்து எப்போதும், 'பிஸியாக' இருக்கும். ரோடு மிகவும் சேதமடைந்த நிலையில் இதை மேம்படுத்தும் பணி துவங்கியது. ஜல்லி கற்களுடன் எம்.சாண்ட் கலவை கொட்டி ரோடு சமன்படுத்தப்பட்டது. ஆனால், தார் ஊற்றப்படவில்லை.இதனால், வாகனங்கள் பயணிக்கும் நிலையில் இந்த கலவை பெயர்ந்து ஜல்லிக்கற்கள் ரோடு முழுவதும் பரவிக்கிடக்கிறது. வாகனங்கள் செல்லும் போது ரோட்டில் உள்ள மண் புழுதியாக மாறி அப்பகுதி முழுவதும் பரவுகிறது. இதனால், டூவீலரில் செல்வோர் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, ரோடு மேம்படுத்தும் பணியை விரைந்து செய்து முடிக்க வேண்டும்.